ஜெயலலிதாவின் ஆட்சி தொடர மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர் என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில், தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவரை முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து, திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. நிர்வாகி ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் வரவேற்றனர்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றதற்கு, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பாரத பிரதமராக வர வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு வந்துள்ளது. அதே போல் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்’’ என்று கூறினார்.