விருதுநகரில் 1½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி: அதிகாலை 2 மணி வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை, சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுகள் விவரம்


விருதுநகரில் 1½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி: அதிகாலை 2 மணி வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை, சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுகள் விவரம்
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 24 May 2019 8:34 PM GMT)

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் விவரம் தெரியவந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் எண்ணிக்கை மிகவும் தாமதமான நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு தான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. தபால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், 1 லட்சத்து 54 ஆயிரத்து 554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாணிக்கம்தாகூருக்கு, தேர்தல் அதிகாரி கலெக்டர் சிவஞானம் வெற்றிக்கான சான்றிதழ் வழங்கினார். இந்த தொகுதியில் முதல் 5 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) - 4,70,883

அழகர்சாமி (தே.மு.தி.க.) - 3,16,329

பரமசிவ அய்யப்பன்(அ.ம.மு.க.)- 1,07,615

முனியசாமி(ம.நீ.ம.) -57,129

அருள்மொழிதேவன்(நாம் தமிழர்) -53,040

தொகுதி வாரியாக விவரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ், தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் தொகுதி வாரியாக விவரம் தெரியவந்துள்ளது. இதன்படி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 84,664 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி 59,538 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 25 ஆயிரத்து 126 அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் மாணிக்கம்தாகூர் 88,629 வாக்குகளும், அழகர்சாமி 59,616 வாக்குகளும் பெற்றனர். இதில் மாணிக்கம் தாகூர் 29 ஆயிரத்து 13 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாணிக்கம்தாகூர் 83075 வாக்குகளும், அழகர்சாமி 63,411 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இங்கு மாணிக்கம்தாகூர் 19 ஆயிரத்து 664 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

விருதுநகர் சட்டன்ற தொகுதியில் மாணிக்கம் தாகூருக்கு 64619 வாக்குகளும், அழகர்சாமிக்கு 42189 வாக்குகளும் கிடைத்துள்ளன. மாணிக்கம் தாகூருக்கு 22,430 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மாணிக்கம்தாகூர் 80,863 வாக்குகளும், அழகர்சாமி 43,158 வாக்குகளும் பெற்றனர். மாணிக்கம் தாகூருக்கு 37,705 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மாணிக்கம்தாகூருக்கு 62,917 வாக்குகளும், அழகர்சாமிக்கு 47,143 வாக்குகளும் கிடைத்துள்ளது. மாணிக்கம் தாகூர் 15,774 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

6 சட்டமன்ற தொகுதிகளிலும் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தான், காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிகபட்சமாக கூடுதல் ஓட்டுகள் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் பட்டாசு தொழில் பிரச்சினைதான் என கூறப்படுகிறது. தபால் வாக்குகளை பொறுத்தமட்டில் மாணிக்கம் தாகூருக்கு 6,216 வாக்குகளும், அழகர்சாமிக்கு 1,274 வாக்குகளும் கிடைத்துள்ளது. தபால் வாக்குகளிலும் அவர் 4 ஆயிரத்து 942 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

6 சட்டமன்ற தொகுதிகளிலும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தான் மாணிக்கம்தாகூருக்கு அதிகபட்சமாக 88,629 வாக்குகள் கிடைத்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அப்போது வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 40,6,694 வாக்குகள் பெற்று இருந்தார். தற்போது இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி 3 லட்சத்து 16 ஆயிரத்து 329 வாக்குகள் பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு 90 ஆயிரத்து 365 வாக்குகள் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அ.ம.மு.க. வேட்பாளர் 1 லட்சத்து 7 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தத்தில் அ.தி.மு.க. ஓட்டுகள் பிரிந்தது அக்கட்சி வேட்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கருதப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான நோட்டா வாக்குகள் 12,725 ஆகும். ஆனால் இந்த முறை 17 ஆயிரத்து 292 வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலைவிட 4 ஆயிரத்து 567 நோட்டா வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளது. நோட்டா வாக்குகள் அதிகரிப்பு என்பது, தேர்தல் நடைமுறையில் வெறுப்புற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு அரசியல் கட்சிகள் தான் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த சாத்தூரை பொறுத்தமட்டில் அங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் 76 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதி வாக்காளர்கள் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான அழகர்சாமிக்கு அளித்துள்ள வாக்குகள் 63 ஆயிரத்து 411 தான்.

இதேபோன்று இந்த தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் 76 ஆயிரத்து 521. ஆனால் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இந்த தொகுதியில் 83 ஆயிரத்து 75 வாக்குகள் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு 6 ஆயிரத்து 554 வாக்குகள் கூடுதலாக அளித்துள்ள இந்த வாக்காளர்கள், நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை விட 13 ஆயிரத்து 566 வாக்குகள் குறைவாக அளித்துள்ளனர்.

இந்த தொகுதி மக்களின் மாறுபட்ட வாக்களிப்பே அந்த தொகுதியில் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றியை அளித்துள்ளது. தேர்தலை பொறுத்தமட்டில் இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 10 சதவீதமும், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 5 சதவீத வாக்குகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story