பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நகை, பணத்தை தவற விட்ட தம்பதி - போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்


பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நகை, பணத்தை தவற விட்ட தம்பதி - போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 25 May 2019 4:00 AM IST (Updated: 25 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரக்கோணம் தம்பதி தவறவிட்ட நகை, பணத்தை போலீசார் மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பழனி,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 34). வியாபாரி. இவருடைய மனைவி ஏஞ்சல் (30). நேற்று முன்தினம் ரவீந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கொடைக்கானல் செல்வதற்காக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் பஸ் மூலம் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்லில் ரெயிலை விட்டு இறங்கிய பின்னர் தனது கைப்பையை காணாது ஏஞ்சல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் ரெயிலிலேயே கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது. இதற்கிடையே ரெயில் திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த பையில் 4 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வைத்திருந்தார்.

இதையடுத்து ரவீந்திரன்-ஏஞ்சல் தம்பதி திண்டுக்கல் ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதாதேவி உடனடியாக ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வடிவேல், முத்துமுனியாண்டி ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ்காரர்கள் அவர்கள் இருந்த பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது தம்பதியின் தவற விட்ட பையை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பை பழனி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரவீந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ரவீந்திரன் தனது மனைவி, குழந்தைகளுடன் பழனி ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று நகை, பணம் அடங்கிய பையை பெற்று கொண்டனர். மேலும் துரிதமாக செயல்பட்டு கைப்பையை மீட்ட போலீசாருக்கு அவர்கள் நன்றி கூறினர். 

Next Story