சீர்காழி பகுதியில், குறுவை சாகுபடி பணி தீவிரம் - தடையின்றி மும்முனை மின்சாரம் வினியோகிக்க கோரிக்கை
சீர்காழி பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி,
தமிழக அரசு ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துபோனதாலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணையில் இருந்து காலம் தாழ்த்தி பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் காவிரி நீர், காவிரி கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முழுமையாக வந்து சேர்வதில்லை. பருவமழை மற்றும் காவிரி ஆற்று நீர் இல்லாததால் சீர்காழியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மேலும் கடுமையான வறட்சி நிலவுகிறது.
இந்த நிலையில் அகனி, நிம்மேலி, வள்ளுவக்குடி, கொண்டல், அகரஎலத்தூர், மருதங்குடி, புங்கனூர், ஆதமங்களம், பெருமங்கலம், திருப்பங்கூர், கதிராமங்கலம், கன்னியாக்குடி, வைத்தீஸ்வரன்கோவில், எடக்குடி வடபாதி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கைவிளாஞ்சேரி, கடவாசல், அத்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் குறுவை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் இன்றி குறுவை சாகுபடி பணி பாதிக்கப்படுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே மின்வாரியத்தினர் விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story