நாமக்கல் அருகே கார்–லாரி மோதி விபத்து: பேரூராட்சி முன்னாள் தலைவர் சாவு


நாமக்கல் அருகே கார்–லாரி மோதி விபத்து: பேரூராட்சி முன்னாள் தலைவர் சாவு
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 5:25 PM GMT)

நாமக்கல் அருகே காரும், லாரியும் மோதிய விபத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல், 

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் சையத் இப்ராகிம் (வயது 56). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காரில் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற சையத் இப்ராகீம் இரவு வீடு திரும்பினார்.

இந்த காரை தர்மபுரியை சேர்ந்த முகமது மீரான் என்கிற சையத் இப்ராகிம் (26) ஓட்டி வந்தார். இந்த கார் நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையம் பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சையத் இப்ராகிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் முகமது மீரான் படுகாயம் அடைந்தார். அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சையத் இப்ராகிம், சீட் பெல்ட் அணியாததால் இறந்து விட்டதும், கார் டிரைவர் முகமது மீரான் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் காயங்களுடன் தப்பி இருப்பதும் தெரியவந்தது.

விபத்தில் இறந்த சையத் இப்ராகிம் பள்ளப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் என்பதும், சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story