மாணவர்கள் விருப்பமான விளையாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் சதீஷ் பேச்சு


மாணவர்கள் விருப்பமான விளையாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் சதீஷ் பேச்சு
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 6:35 PM GMT)

மாணவர்கள் விருப்பமான விளையாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் சதீஷ் பேசினார்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி சார்பில், கோடைவிடுமுறையையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் ஜிம்னாஸ்டிக், தடகளம், கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து உள்பட பல்வேறு வகையான விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.

பயிற்சி முகாமின் நிறைவுவிழா திருச்சி தேசிய கல்லூரி அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஐ.பி.எல்.கிரிக்கெட் வீரர் சதீஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த பயிற்சி முகாமை பயன்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு செல்ல வேண்டும். மாணவ-மாணவிகள் பலர் கோடை கால பயிற்சி முகாமை முடித்தவுடன் விளையாட்டை விட்டு விடுகிறார்கள். பொதுவாக செல்போனில் கேம்ஸ் விளையாடுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அது மிகவும் தவறு. விளையாட்டுக்கு செல்ல வேண்டு மானால் பயிற்சி தேவை. ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பாக எத்தனை தேர்வுகளை எழுதுகிறோம். அதேபோல் தான் ஒரு விளையாட்டை தொடங்குவதற்கு முன் பயிற்சி முக்கியம். கிரிக்கெட் மட்டும் விளையாட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எந்த விளையாட்டில் மாணவர்களுக்கு விருப்பம் உள்ளதோ? அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லூரி இயக்குனர் பிரசன்னபாலாஜி வரவேற்றார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் செல்வம், தயாநிதி, உருமு தனலெட்சுமி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் பூபதி நன்றி கூறினார். 

Next Story