செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்


செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 6:45 PM GMT)

பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீட்டினை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பெரம்பலூர்,

வீட்டை கட்டிப்பாரு, கல்யாணத்தை பண்ணிப்பாரு என்ற வாசகம், காலம்காலமாக நாம் பேசிவரும் ஒன்று. இந்த காலத்தில் கல்யாணம் செய்வதுகூட எளிதான ஒன்று. ஆனால், வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இப்போது மணல், செங்கல், சிமெண்டு, ஆள் பற்றாக்குறை, தொழிலாளிகளின் ஊதியம், தரமான கட்டுமானம் என்று வீட்டை கட்டி முடிப்பதுக்குள் போதும், போதும் என்றாகிவிடும். அதையும் தாண்டி, சிறு வீட்டையோ அல்லது கோடிகளில் மாளிகைகளையோ கட்டுபவர்களும் உண்டு. எவ்வளவு பெரிய வீடு கட்டினாலும், அதன் தரத்தில் சிறு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். பழங்காலத்தில் கருங்கற்களையும் சுண்ணாம்பு, சிமெண்டு ஆகியவற்றை கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள், இன்றளவும் உறுதியாக நிற்கின்றன. தற்போது கட்டப்படும் வீடுகளின் அவ்வாறு உறுதி தன்மை இருக்குமோ? என்று தெரியவில்லை. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் வடக்கு பிரதான சாலையில், அதே கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் செங்கல், மணல் ஏதுவுமின்றி தெர்மாகோலை கொண்டு வீடு கட்டி வருகிறார். இதனை அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், அந்த வழியாக செல்வோர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் ராமர் கூறுகையில், நான் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறேன். இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் தொழில் ரீதியாக சென்று வருகிறேன். அவ்வாறு தொழிலுக்காக கோவைக்கு ஒரு வீட்டின் கிரகப்பிரவேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக மின்விசிறி, குளிர்சாதனம் (ஏ.சி.) ஏதும் இயங்காத நிலையில், வெயிலின் தாக்கம் இன்றி குளுமையாக இருந்தது. அது குறித்து, வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட போது, இந்த வீடு தெர்மாகோல் மூலமாக கட்டப்பட்டது என்றனர். நானும் ஆரம்பத்தில் இதனை நம்பவில்லை. பின்னர் இது குறித்து முழுமையாக விசாரித்தேன் அப்போது, இது சாத்தியம் தான் என்று நினைத்தேன். இதுகுறித்து இணையதளத்தில் ஆய்வு செய்தபோது இதுபோன்ற வீடுகள் வெளி நாடுகளில் அதிக அளவில் கட்டப்பட்டு வருவதை அறிந்தேன். பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது அவர்கள் முதலில் பயந்தார்கள் பிறகு ஏற்றுக்கொண்டார்கள். இதனையடுத்து தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தரைத்தளத்தில் ஸ்டுடியோவும், முதல் தளத்தில் வீடும் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் ஆனந்த கீதன் கூறுகையில், பெரம்பலூரில் முதன்முறையாக தெர்மாகோலால் கட்டப்படும் வீடு இது தான். இந்த தெர்மாகோல் தொழில்நுட்பம் மூலம் வெளிநாடுகளில் அதிகமாக வீடுகள் கட்டி வருகின்றனர். நாங்கள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பத்தில் தனிநபர் கழிவறைகள் கட்டிக்கொடுத்தோம். அதனை தொடர்ந்து, ஒருவருக்கு மாடியில் அறை ஒன்று கட்டிக்கொடுத்தோம். பிறகு படிப்படியாக தற்போது ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளது. இதற்காக அளவுகள் எடுக்கப்பட்டு தேவையான அளவுகளில் வெல்ட் மெஷ் என்று அழைக்கக்கூடிய கம்பி வலைகளுக்கு இடையே 3 அங்குலம் அளவு கொண்ட தெர்மாகோல்களை வைத்து பேனல்களாக தயாரித்து, அதனை எடுத்து வந்து சுவர்களுக்கு பதிலாக பொருத்தி உள்ளோம்.

பிறகு அதன் மேல் கலவையை கொண்டு, மெத்தி விட்டு, அதனைத்தொடர்ந்து பூச்சுவேலை செய்வோம். இவ்வாறு செய்வதானால் கால நேரமும், பொருள் விரையமும் குறையும். மேற்கொண்டு, செங்கல், கருங்கல், மணல் எதுவும் தேவையில்லை. இந்த தொழில் நுட்பத்திற்கு ஆட்கள் செலவும் மிக மிகக்குறைவு. மேலும் வீட்டின் எடையும் மிகக்குறைவு, வீடுகளில் ஏற்படும் விரிசல், சூறாவளி, கடும் மழை போன்ற அனைத்தையும் தாங்கும் சக்தி உண்டு. இதுமட்டுமின்றி தற்போது ஏற்பட்டுள்ள மணல் மற்றும் செங்கல் தட்டுப்பட்டிற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும் என்றார். 

Next Story