கரூரில், அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது


கரூரில், அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 7:25 PM GMT)

கரூரில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதுகின்றன.

கரூர்,

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் புதுடெல்லி விமானப்படை, சென்னை ஐ.சி.எப்., மும்பை சென்டிரல் ரெயில்வே, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா, லோனாவில்லா இந்தியன் நேவி, சென்னை இந்தியன் வங்கி, ஐதராபாத் வருமானவரித்துறை, புதுடெல்லி இந்திய ராணுவ அணி என 8 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளின் முடிவில் பேங்க் ஆப் பரோடா, சென்னை ஐ.சி.எப்., புதுடெல்லி இந்திய ராணுவ அணி, இந்தியன் வங்கி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் பேங்க் ஆப் பரோடா அணியும், புதுடெல்லி இந்திய ராணுவ அணியும் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் போட்டி போட்டு புள்ளிகளை அள்ளினர். ஆட்ட நேரம் முடிய 2 நிமிடங்களே இருந்த நிலையில், 2 அணிகளும் 56-56 என சமநிலையில் இருந்ததால் வெற்றி பெறப்போவது யார்? என ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. அப்போது பேங்க் ஆப் பரோடா அணி வீரர்கள், ஆக்ரோஷமாக செயல்பட்டு 6 புள்ளிகளை சேர்த்தனர்.

முடிவில் பேங்க் ஆப் பரோடா அணி, 62-58 என்கிற புள்ளிகள் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் பேங்க் ஆப் பரோடா வீரர் கார்த்திகேயன் 22 புள்ளிகளையும், ராணுவ அணி வீரர் சனிஷெர்அகமது 17 புள்ளிகளையும் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் சென்னை ஐ.சி.எப். அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதின. இதில் இரண்டு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடியதால் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகளை குவித்தன. எனினும் கடைசி நேரத்தில் சென்னை ஐ.சி.எப். அணி சறுக்கியதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. முடிவில் 78-72 என்ற கணக்கில், சென்னை ஐ.சி.எப்.அணியை வீழ்த்தி, சென்னை இந்தியன் வங்கி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி அணியும், பேங்க் ஆப் பரோடா அணியும் மோதுகின்றன. முன்னதாக 3-வது, 4-வது இடத்தை பெறுவதற்கான ஆட்டத்தில், சென்னை ஐ.சி.எப்-இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன. அதன் பின்னர் பரிசளிப்பு மற்றும் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

Next Story