ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்


ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 9:20 PM GMT)

ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே கட்டளை கதவணைகள் கட்டி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு வெண்டிபாளையத்தில் கட்டளை கதவணை கட்டப்பட்டு மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 2 மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 30 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது காவிரியில் தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி நடைபெறவில்லை. அடுத்து வரும் ஜூன் மாதம் முதல் பருவமழை பெய்து காவிரியில் வெள்ளம் வரும் வாய்ப்பு இருப்பதால், மின் உற்பத்தி நிலையத்தை பராமரிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கட்டளை கதவணையின் ‌ஷட்டர்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 18 ‌ஷட்டர்களில் 2 ‌ஷட்டர்களுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது. 3–வது ‌ஷட்டருக்கு பெயிண்ட் அடிக்கும் பணி தொடங்கி உள்ளது. முன்னதாக ‌ஷட்டரை மேலே உயர்த்தி, அதற்கு பதிலாக மாற்று ‌ஷட்டர் பொருத்தப்பட்டு தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டு இருக்கிறது. மேலே உயர்த்தப்பட்ட ‌ஷட்டரில் படிந்து இருக்கும் மண் மற்றும் இரும்பு கறைகளை அகற்றும் பணி நடக்கிறது.

காற்றழுத்த எந்திரம் மூலம் மணலையும் பீய்ச்சி அடித்து தொழிலாளர்கள் சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறார்கள். ஒரு ‌ஷட்டரை சுத்தம் செய்து பெயிண்ட் அடிக்க 6 முதல் 7 நாட்கள் ஆகிறது. பெயிண்ட் காய 7 நாட்கள் ஆகிறது. இந்த பணியில் 4 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு ‌ஷட்டராக இரும்பு துரு நீக்கி பெயிண்ட் அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதுபோல் அணைக்கட்டு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள விரிசல்கள் சரிசெய்யும் பணியும் மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றன.


Next Story