நடிகை ரம்யா மீது பா.ஜனதா பெண் நிர்வாகி சாடல் ’குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘


நடிகை ரம்யா மீது பா.ஜனதா பெண் நிர்வாகி சாடல் ’குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘
x
தினத்தந்தி 25 May 2019 11:30 PM GMT (Updated: 2019-05-26T03:07:30+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் நடிகை ரம்யா மீது பா.ஜனதா மகளிர் அமைப்பின் துணை தலைவி டுவிட்டரில் சாடியுள்ளார். அதாவது, குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு, 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக உள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டும் வாகை சூடியது.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சமூக வலைத்தள பிரிவு தலைவியும், நடிகையுமான ரம்யா டுவிட்டரில் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு பெரும் விவாதத்துக்கு உள்ளானார்.

இந்த நிலையில், நடிகை ரம்யாவுக்கு, கர்நாடக பா.ஜனதா மகளிர் அமைப்பின் துணை தலைவியும், நடிகர் கணேசின் மனைவியுமான ஷில்பா டுவிட்டரில் கேள்விகள் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஷில்பா தனது டுவிட்டர் பதிவில், ‘ரம்யா எங்கு இருக்கிறாய்?. உங்கள் தலைவர் ராகுல் எங்கே?. சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை கையாளும் படை எங்கே?. தலையில்லாத உங்களின் டுவிட்டர் பதிவு எங்கே?. உங்களின் ஆதாரமில்லா குற்றச்சாட்டுகள் எங்கே போனது?. அதற்காக தான் கூறுகிறேன். இன்னொருவரை பற்றி குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தாங்களே தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இன்னொரு டுவிட்டர் பதிவில் நடிகர் பிரகாஷ்ராஜை அவர் தாக்கி கருத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஜனவரி மாதத்தில் பிரகாஷ் ராஜ் பேசுகையில், 6 மாதத்துக்கு பிறகு நரேந்திர மோடி வெறும் எம்.பி.யாக மட்டும் இருப்பார் என்று கூறினார். ஆனால் இப்போது பிரகாஷ் ராஜ் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்துள்ளதோடு, மூளையையும் இழந்துள்ளார்’ என்றார்.

இந்த 2 டுவிட்டர் பதிவுக்கும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவும், காங்கிரஸ் கட்சி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜின் ஆதரவாளர்கள் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story