பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: 29-ந் தேதி நடக்கிறது


பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: 29-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 26 May 2019 12:15 AM GMT (Updated: 25 May 2019 9:49 PM GMT)

பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்ததே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைய காரணம் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் வருகிற 29-ந் தேதி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ளது.

மந்திரி பதவி கிடைக்காததால், கூட்டணி ஆட்சியின் மீது 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சித்தராைமயா உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிக்கலாம் என்பதால், இந்த கூட்டம் கூட்டப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு உண்டான தோல்வி மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடனான கூட்டணி தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story