மானாமதுரையில் முன்விரோதத்தில் மீன் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு ஒருவர் கைது
மானாமதுரையில் முன்விரோதத்தில் மீன் வியாபரிக்கு சாரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை அழகர்கோவிலை சேர்ந்தவர் கோபால் மகன் செந்தில் (வயது 37). இவர் மானாமதுரை பேரூராட்சி பின்புறம் மீன்கடை நடத்தி வருகிறார். இவருடைய அண்ணன் வேல்முருகனின் மகன் அஜீத் (22).
மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் மகன் பாலமுருகன் (24). இவருக்கும் அஜீத்துக்கும் கபடி விளையாட்டு போட்டியின் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததை தொடர்ந்து அவர்கள் சண்டை போட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை செந்தில் தனது கடையில் இருந்து பேரூராட்சிக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு வந்தார். அங்கு டீக்கடையில் சிலர் டீக்குடித்து கொண்டிருந்தனர். செந்தில் தனக்கு டீயை வாங்கிக் கொண்டு கடையின் முன்புறம் நின்றிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த பாலமுருகன், செந்திலிடம் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். அதில் செந்திலுக்கு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து செந்திலின் உறவினர்கள் மானாமதுரை நகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.