பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் வெறிச்செயல்


பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 26 May 2019 12:15 AM GMT (Updated: 25 May 2019 10:41 PM GMT)

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து காரசார விவாதத்தின் போது பா.ஜனதா தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தல் முடிவு கடந்த 23-ந் தேதி வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி சாதனை வெற்றியை பதிவுசெய்தது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள மொகாலா கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா சிறுபான்மையினர் பிரிவு தொண்டரான மதீன் படேல்(வயது 48) என்பவருக்கும், அவரது சமுதாயத்தை சேர்ந்த எதிர்க்கட்சியினர் சிலருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு எல்லை மீறி போனது. இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மதீன் படேலுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் கையில் கிடைத்த இரும்பு கம்பி, கட்டை போன்றவற்றால் 10 பேர் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். இதை தடுக்க வந்த மதீன் படேலின் சகோதரருக்கும் பலத்த அடி விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த மதீன் படேல் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் காங்கிரஸ் பிரமுகர் இதாயத் படேல் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.


Next Story