ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறும் திருமங்கலம் ரெயில் நிலையம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு


ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறும் திருமங்கலம் ரெயில் நிலையம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 10:45 PM GMT)

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக திருமங்கலம் ரெயில்நிலையம் புதுப்பொலிவு பெறும் வகையில் ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் கூடுதலாக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

மதுரை,

இந்திய ரெயில்வேயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ஒரு சில ரெயில் நிலையங்களை ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் (முன்மாதிரி ரெயில் நிலையங்கள்) தேர்ந்தெடுக்கின்றனர். அதன்படி, தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில், கூடல்நகர் ரெயில்நிலையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆதர்ஷ் ரெயில்நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு ரெயில்கள் நிறுத்தப்படாமல் பயணிகள் பயன்பாடின்றி உள்ளது. ரெயில்நிலையத்துக்கு செல்வதற்கு சரியான பாதை கூட இல்லாமல் உள்ளது. இதற்கிடையே, மதுரை கோட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கடையநல்லூர் மற்றும் கொல்லம் மாவட்டம் குந்த்ரா ஆகிய ரெயில்நிலையங்கள் ஆதர்ஷ் ரெயில்நிலையங்களாக அறிவிக்கப்பட்டன.

இதற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில், முதற்கட்ட பணிகள் கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குந்த்ராவில் தொடங்கி வருகிற ஜூன் மாதத்துக்குள் நிறைவடைய உள்ளது. இந்த பணிகளில் நடை மேம்பாலம், ஸ்டேசன் முகப்பு பகுதி சீரமைப்பு, கட்டண கழிப்பறை, தோட்டம் ஆகியன அமைக்கப்பட்டு வருகிறது.

கடையநல்லூர் ரெயில்நிலையத்தில் நடைமேம்பாலம், முகப்பு பகுதி சீரமைப்பு மற்றும் தோட்டம் ஆகியன அமைக்கப்பட்டு பணிகள் வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 ரெயில் நிலையங்களில் நடந்து வரும் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா தலமான திருப்பரங்குன்றம் ரெயில்நிலையத்தில், தற்போது வரை நடைமேம்பாலம் இல்லாமல் உள்ளது. இதனால், பயணிகள் பிளாட்பாரங்கள் மாறி செல்ல கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். தற்போது ஆதர்ஷ் திட்டத்தில் நடை மேம்பாலம், தோட்டம், ரெயில்நிலைய முகப்பு சீரமைப்பு, தண்டவாளங்களை கடந்து செல்லும் வகையிலான டிராலி பாதை ஆகியன அமைக்கப்பட உள்ளது.

அதேபோல் தென்மாவட்டங்களின் முக்கிய ரெயில்நிலையமாக இருந்து வரும் திருமங்கலம் ரெயில்நிலையத்தில் பல்வேறு பணிகள் நடக்க உள்ளன. இதில், ரெயில்நிலையம் செல்வதற்கான பாதையில் ரோடு அமைத்தல், ரெயில்நிலைய முகப்பு சீரமைப்பு, தண்டவாளங்களுக்கு இடையே டிராலி செல்வதற்கான பாதை, கம்பிவேலி தடுப்புகள், தோட்டம், 1–வது பிளாட்பாரத்தில் கழிப்பறை வசதி ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரெயில்நிலையத்தில், தென்மாவட்டங்களில் இருந்து மைசூர், சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் நின்று செல்கின்றன. மேலும், தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து திருமங்கலம் ரெயில்நிலையம் ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது.

திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ரெயில்நிலையங்களில் பயணிகளுக்காக நடக்க உள்ள பணிகளுக்காக ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, திருமங்கலம் ரெயில்நிலையத்தில் கட்டப்பட உள்ள கழிப்பறைக்காக மட்டும் தனியாக ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.

அத்துடன், ரெயில்வே துறையின் ஆர்.வி.என்.எல். நிறுவனம் இரட்டை அகல ரெயில்பாதை அமைக்கும் பணிக்காகவும் திருமங்கலம் ரெயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், திருமங்கலம் ரெயில்நிலையம் புதுப்பொலிவுடன் பயணிகளுக்கான கூடுதல் வசதிகளுடன் விரைவில் மாற உள்ளது. இது திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ரெயில் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story