சாராயக் கடையில் மீனவருக்கு சரமாரி வெட்டு; 4 பேர் கைது


சாராயக் கடையில் மீனவருக்கு சரமாரி வெட்டு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 5:00 AM IST (Updated: 26 May 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

வீராம்பட்டினத்தில் சாராயக் கடைக்குள் புகுந்த கும்பல் அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த மீனவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் வீதியைச் சேர்ந்தவர் கமல் (வயது 38), மீனவர். இவர் அப்பகுதியில் உள்ள சாராயக்கடையில் சுற்றித் திரிந்து அங்கு சாராயம் குடிக்க வருபவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கமல், அவருடைய நண்பர்கள் விஜி, வேலு, தினகரன் ஆகியோருடன் சாராயக் கடையில் அமர்ந்து சாராயம் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது வேலு, விஜி, தின கரன் ஆகிய 3 பேரும் அருகில் உள்ள கடைக்கு சென்றனர்.

அந்த நேரத்தில் சாராயக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த கமலை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கமல் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கமலை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மீனவர் கமல், வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், கபிலன், மலர்வாணன், புகழேந்தி ஆகியோரை அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் தரப்பினர் மீனவர் கமலை தாக்கினார்களா? எனவும், கடந்த ஆண்டு ஸ்ரீதர் என்பவரை சாராயக்கடையில் வைத்து கமல் பாட்டிலால் குத்தி கொலை செய்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக கமலை வெட்டிக் கொலை செய்ய முயற்சி நடந்ததா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் ராஜசேகர் தரப்பினர் மீனவர் கமலை தாக்கி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்தவர்கள் அரியாங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 39), கபிலன் (48), வீராம்பட்டினம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த மலர்வாணன் (29), புகழேந்தி (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story