லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி


லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 26 May 2019 10:30 PM GMT (Updated: 26 May 2019 4:58 PM GMT)

லாரி–மினி லாரி மோதியதில் தந்தை–மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.

சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 40). இவருடைய மகன் ரகமத் பாட்ஷா (17). கஞ்சநாயக்கன்பட்டிக்கு அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலு (35), ரமேஷ் (26). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்கள் 4 பேரும் ஓமலூர் சந்தையில் ஒரு மாட்டை விலைக்கு வாங்கி அதை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு பி.நாட்டாமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மினி லாரியை சாதிக் பாட்ஷா ஓட்டினார்.

நேற்று முன்தினம் இரவு கந்தம்பட்டி மேம்பாலத்தில் மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை அதன் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் சாதிக் பாட்ஷாவும் மினி லாரியை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது மினி லாரிக்கு பின்னால் வேகமாக வந்த மற்றொரு லாரி, கண் இமைக்கும் நேரத்தில் மினி லாரி மீது மோதியது.

விபத்தில் 2 லாரிகளின் இடையில் சிக்கிக்கொண்ட மினி லாரி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த இடிபாட்டில் சிக்கி ரகமத்பாட்ஷா, ரமேஷ், பாலு ஆகிய 3 பேரும் மினி லாரிக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். டிரைவர் சாதிக் பாட்ஷா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாதிக் பாட்ஷாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே சாதிக் பாட்ஷாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இடிபாட்டில் சிக்கிய மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story