கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஏற்காடு,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலை கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், படகு இல்லம் மற்றும் ஏரி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிபார்ப்பது வழக்கம்.
தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறையின் கடைசி வாரம் என்பதால் நேற்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பகல் பொழுதில் கடும் வெப்பம் நிலவிய நிலையில் மாலை 3 மணிக்கு பிறகு குளிர்ந்த காற்று வீசியது.
மாலை 3 மணியளவில் சிறிதுநேரம் சாரல் மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து வானில் வானவில் தோன்றியது. வாலிபர்கள், குழந்தைகள், இளம்பெண்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் படகு சவாரி சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படகு இல்லம் அருகே உள்ள ஏரி பூங்காவில் தற்போது ஏராளமான பூக்கள் பூத்து குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று மலர்களை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏற்காட்டில் ஓட்டல்கள், கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மேலும் சுற்றுலா பயணிகள அதிகளவில் வாகனங்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். மேலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.