ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, பெங்களூரு புறப்பட்டு சென்றது


ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, பெங்களூரு புறப்பட்டு சென்றது
x
தினத்தந்தி 27 May 2019 4:30 AM IST (Updated: 26 May 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, பெங்களூரு புறப்பட்டு சென்றது.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை என்ற இடத்தில் மலைகளில் வடிவமைக்கப்பட்ட 350 டன் கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலையானது, ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு நோக்கி சென்றது.

பல ஊர்களை தாண்டியும், பல்வேறு பிரச்சினைகளை கடந்தும் 7 மாதங்களுக்கு பின்னர், கடந்த 22-ந் தேதி தமிழக எல்லையான ஓசூர்-ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியை சென்றடைந்தது. கடந்த 4 நாட்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, நேற்று முன்தினம் மாலை பெங்களூரு நோக்கி நகர்ந்தது. அப்போது, கோதண்டராமர் சிலையை, பெங்களூரு மாநகர மேயர் கங்காம்பிகா மற்றும் சிலை அமைப்புக்குழு தலைவர் சதானந்தா உள்ளிட்டோர் கொடியசைத்து சிலையின் பயணத்தை தொடங்கி வைத்து, மாநகரத்திற்கு வரவேற்றனர்.

முன்னதாக, சிலை வடிவமைப்பு குழுவினர் மற்றும் ஈஜிபுரா கோதண்டராமர் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், தமிழகத்தில் இருந்து் இந்த பிரமாண்ட சிலை கடந்து வந்த பாதையில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க, 3 பில்லர் வண்டிகள் முன் இழுத்துச்செல்ல அதன் பின்னே கோதண்டராமர் சிலை பெங்களூரு நோக்கி புறப்பட்டது. வழி நெடுகிலும் சிலைக்கு பொதுமக்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Next Story