ஆவடி அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் பிணமாக மீட்பு


ஆவடி அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 26 May 2019 10:00 PM GMT (Updated: 26 May 2019 7:23 PM GMT)

ஆவடி அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவரை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பிணமாக மீட்டனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மகன் கோபி (வயது 15). பட்டாபிராம் சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளார். கோபி, நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களுடன் முத்தாபுதுப்பேட்டை அடுத்த பாலவேடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

முதலில் கிணற்றில் குதித்த கோபி, நீரில் மூழ்கி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும், முத்தாபுதுப்பேட்டை போலீசார், ஆவடி மற்றும் அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள் இருட்டிவிட்டதால் மின்விளக்குகள் அமைத்து மோட்டார் பம்புகள் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். சுமார் 10 மணிநேர போராட்டத்துக்கு பிறகு கிணற்றில் இருந்து மாணவரை பிணமாக மீட்டனர்.

மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story