திருச்சி அருகே துணிகரம்: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


திருச்சி அருகே துணிகரம்: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 26 May 2019 10:15 PM GMT (Updated: 26 May 2019 7:47 PM GMT)

திருச்சி அருகே ஓய்வு பெற்ற சார்பதிவாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், அவருடைய காரையும் ஓட்டிச்சென்றனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் தங்கள்நகரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன்(வயது 68). இவர் பத்திர பதிவுத்துறையில் சார்பதிவாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் நெடுஞ்செழியன் தனது குடும்பத்துடன் குழந்தையை பார்க்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு லண்டனுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதனால் அவருடைய வீடு ஒரு மாதமாக பூட்டிக்கிடந்தது. இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு நெடுஞ்செழியனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றுவிட்டனர். அத்துடன், வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி இருந்த காரையும் ஓட்டிச்சென்றுவிட்டனர்.

நகை, பணம், கார் திருட்டு

இந்த நிலையில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அதிகாலையில் எழுந்து பார்த்த போது, நெடுஞ்செழியனின் வீடு திறந்து கிடந்ததுடன், அங்கு நிறுத்தி இருந்த காரும் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து லண்டனில் உள்ள நெடுஞ் செழியனுக்கும் தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து அவர், துறையூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நெடுஞ்செழியன் லண்டனில் இருந்து வந்தபிறகுதான் எவ்வளவு நகை, பணம் திருட்டு போனது என்ற விவரம் தெரியவரும். திருட்டு போன காரின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வு பெற்ற சார்பதிவாளர் வீட்டில் நகை-பணம், காரை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதுபோல், துறையூரை அடுத்து உள்ள சிங்களாந்த புரம் பகுதியை சேர்ந்த டிரைவர் நல்லுசாமி (47) வீட்டிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரும் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்தும் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

துறையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடைகளிலும், வீடுகளிலும் தொடர் திருட்டு நடந்து வருகிறது. நகை மற்றும் பணம் திருட்டு போனதாக பொதுமக்கள் துறையூர் போலீசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் புகாரை பெறுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இவ்வளவு நகை திருட்டு போனதா? இந்த நகை எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது? என்று பேசி பொதுமக்கள் மனம் புண்படும் வகையில் போலீசார் நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story