ஆசனூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது


ஆசனூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது
x
தினத்தந்தி 26 May 2019 11:24 PM GMT (Updated: 2019-05-27T04:54:51+05:30)

ஆசனூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பர்கூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.

தாளவாடி,

தாளவாடி அருகே ஆசனூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆசனூர் பகுதியில் பகலில் வெயில் கொளுத்தியது. மதியம் 3.30 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் மழை தூற தொடங்கியது. பின்னர் 4.30 மணி முதல் 5.30 மணி வரை இடி–மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.

இதேபோல் அரேபாளையம், திம்பம், தலமலை, பனக்கள்ளி, கெட்டவாடி, திகினாரை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆசனூர்–அரேபாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தண்ணீர் வடிந்தது. அதன்பின்னரே வாகன போக்குவரத்து நடைபெற்றது.

மேலும் அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ள தாமரைக்கரை, ஈரெட்டி, தேவர்மலை, தட்டக்கரை மற்றும் மேற்கு மலைப்பகுதியில் உள்ள கொங்காடை, தாளக்கரை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு ஆலங்கட்டியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடி–மின்னலுடன் இரவு 8 மணி வரை 2 மணி நேரம் பெய்தது. இதனால் மணியாச்சிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வானில் இருந்து விழுந்த ஆலங்கட்டிகளை பொதுமக்கள் பாத்திரங்களில் எடுத்து சேகரித்து வைத்தனர். மேலும் சிறுவர்–சிறுமிகள் கையில் எடுத்து விளையாடினார்கள்.

ஊஞ்சலூர் பகுதியில் சின்னம்மாள்புரம், கணபதிபாளையம் நால்ரோடு, கருமாண்டம்பாளையம், நடுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் 7.20 மணி வரை பலத்த மழை பெய்தது.


Next Story