ஞாயிற்றுக்கிழமையும் கேண்டீன் செயல்பட வேண்டும் முன்னாள் படைவீரர் சங்கம் வலியுறுத்தல்


ஞாயிற்றுக்கிழமையும் கேண்டீன் செயல்பட வேண்டும் முன்னாள் படைவீரர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 27 May 2019 9:19 PM IST)
t-max-icont-min-icon

ஞாயிற்றுக்கிழமையும் கேண்டீன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் படைவீரர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் வளாகத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் சங்க மாநில தலைவர் சி.டி.அரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் புஷ்பராஜ், இணைச் செயலாளர் இருதயராஜ், செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் சி.டி.அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


முன்னாள் படை வீரர்களுக்கான கேண்டீன் 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. லாபம் ஈட்டவில்லை என்று கூறி இந்த கேண்டீனை மூடுவதற்கு முயற்சி செய்தனர். அதிகாரிகள் சிலர், கேண்டீனுக்கு வந்த பொருட்களை எல்லாம் வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்தனர். இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். தற்போது ஊழல் செய்த அதிகாரிகள், பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அதிகாரிகள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேண்டீனை மூடுவதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கிறது.

எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கேண்டீன் செயல்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை கேண்டீன் மூடப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பலர், பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. அன்றைய தினம் கேண்டீனை திறந்தால் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். எனவே ஞாயிற்றுக்கிழமையும் கேண்டீன் செயல்பட வேண்டும்.


கூடுதல் பணியாளர்களை நியமித்து ஊழல் இன்றி கேண்டீன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான பொருட்கள், மதுபானங்கள் வரவழைக்கப்பட வேண்டும். விமானப்படை கேண்டீனுடன் இந்த கேண்டீன் இணைக்கப்பட்டிருந்தால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். பல்வேறு சலுகைகள் ரத்தாகி இருக்கும். எங்களது கோரிக்கையை ஏற்று கேண்டீன் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்த முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story