அக்னீசுவரர் கோவிலில் திருட்டு போன சாமி சிலைகளை மீட்க தனிப்படை அதிகாரிகள் பேட்டி


அக்னீசுவரர் கோவிலில் திருட்டு போன சாமி சிலைகளை மீட்க தனிப்படை அதிகாரிகள் பேட்டி
x
தினத்தந்தி 27 May 2019 10:15 PM GMT (Updated: 27 May 2019 6:59 PM GMT)

திருமருகல் அருகே அக்னீசுவரர் கோவிலில் திருட்டு போன சாமி சிலைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வேளாக்குறிச்சி ஆதீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு 3 சாமி சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார், சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் திருட்டு போன சாமி சிலைகள் இன்னும் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் மேல்விசாரணைக்காக சிலை திருட்டு தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், அக்னீசுவரர் கோவிலில் சாமி சிலைகள் திருட்டு போனது குறித்து ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு திருச்சி மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு குமார், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் ஆகியோர் நேற்று திருப்புகலூர் அக்னீசுவரர் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் உள்ள மற்ற சிலைகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு 3 மணி நேரம் நடந்தது.

தனிப்படை

ஆய்வின் போது கோவிலின் 18-வது குரு மகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் உடனிருந்தார். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், அக்னீசுவரர் கோவிலில் திருட்டு போன சாமி சிலைகளை கண்டுபிடித்து மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருட்டு போன சிலைகள் மீட்கப்படும் என்றனர்.

Next Story