தீவுகளை சுற்றி மிதவைகள் போட எதிர்ப்பு வனத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை
தீவுகளை சுற்றிலும் மிதவைகள் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள், மீனவ பெண்கள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 சின்னஞ்சிறிய குட்டித்தீவுகள் உள்ளன. இந்தக் கடல் பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவைகள் உள்ளதால் அவற்றை பாதுகாக்கும் வகையில் தேசிய கடல்பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வனத்துறையின் சார்பில் குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு, சிங்கிலி தீவு, பூமரிச்சான் தீவு ஆகிய தீவுகளை உள்ளடக்கி சூழல் சுற்றுலா திட்டத்தினை செயல்படுத்த தற்போது அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்திற்காக தீவுகளின் எல்லைகளை மறுவரையறை செய்து மிதவைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 500 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 26 மிதவைகள் போடப்பட்டு வருகின்றன. இந்த மிதவைகள் போடுவதற்கு மீனவர்கள், மீனவ பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மிதவைகள் போடுவது தொடர்பாக மீனவர்களின் கருத்தை கேட்டறியவும், மீனவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் விளக்க கூட்டம் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள், மீனவ பெண்கள் தீவுகளை சுற்றிலும் மிதவைகள் போடுவதால் தங்களால் அந்த பகுதிகளுக்குள் சென்று தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும், ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் மீதம் உள்ள வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும் என்றும் கூறி மிதவைகள் போடுவதை கடுமையாக எதிர்த்தனர். இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து மீனவர்கள், மீனவ பெண்கள் திரளாக வனத்துறை அலுவலக வாசலில் வந்து மிதவை போடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகிறீர்கள். அவ்வாறு பாதிப்பு ஏற்படாது என்றால் அதனை நிரூபிக்கும் வகையில் அந்த பகுதிக்குள் சென்று தொழில் செய்ய அனுமதி வழங்கி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து வன பாதுகாவலர் அசோக்குமாரிடம் கேட்டபோது, “சூழல் சுற்றுலா திட்டத்திற்காக தீவுகளை சுற்றிலும் எல்லை வரையறை செய்யப்படுகிறது. இதற்காக மிதவைகள் அமைக்கப்படுகிறது. இந்த மிதவைகள் அமைக்கப்பட்டதில் தொழில்நுட்ப குறைபாடு இருந்ததால் ஐ.ஐ.டி வல்லுனர்களை கொண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மிதவைகளைத் தான் தற்போது போடுகின்றோம். இதனால் மீனவர்களுக்கும், மீனவ பெண்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் தொழில் செய்யலாம். அச்சப்பட தேவையில்லை.” என்றார்.