நவீன கருவி மூலம் போலீசார் சோதனை அதிவேகமாக வந்த வாகனங்களுக்கு அபராதம்
கடற்கரை சாலையில் அதிகவேகமாக வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் நவீன கருவி மூலம் கண்காணித்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் டெல்லியில் உள்ள சாலை போக்குவரத்து கல்வியியல் குழு நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் மெகரா தலைமையிலான குழுவினர் கடந்த ஒரு மாதமாக புதுவையில் முகாமிட்டு போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
ஸ்பீடு லேசர் கன் என்ற அந்த கருவியில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன கருவியின் பயன்பாடுகளை போக்குவரத்து போலீசார் அறிந்து அதன் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து கொண்டனர்.
இந்த கருவி மூலம் 200 மீட்டர் தொலைவில் வரும் வாகனம் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த வாகனம் 100 மீட்டர் அளவில் வரும்போது அதன் பதிவு எண், வேகம் ஆகியவற்றை பிரிண்ட் அவுட் ஆகவும் எடுத்து கொடுக்கும். புதுவை காவல்துறையில் தற்போது பரீட்சார்த்த முறையில் இந்த கருவியின் சோதனை நடந்து வருகிறது.
இந்த கருவியினை கொண்டு புதுவை போக்குவரத்து போலீசார் வாரந்தோறும் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் வாகன சோதனை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் புதுவை கடற்கரை சாலையில் நேற்றுக்காலை இந்த கருவி மூலம் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனங்களை வழிமறித்து அபராதம் விதித்தனர். அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.400 வரை அபராதம் விதித்தனர். சுமார் 40 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.