செல்லியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு பூஜைக்கு அனுமதி மறுப்பு ஒரு தரப்பினர் சாலை மறியல்


செல்லியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு பூஜைக்கு அனுமதி மறுப்பு ஒரு தரப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 May 2019 11:00 PM GMT (Updated: 27 May 2019 7:42 PM GMT)

செல்லியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு பூஜைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், ஒரு தரப்பினரை பங்கேற்க விழாக்குழுவினர் அழைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அந்த தேரோட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியபடி, சமரசக்கூட்டம் நடத்தப்பட்டு கடந்த ஆண்டு திருவிழா அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. அதுபோல இந்த ஆண்டும் அதிகாரிகள் முன்கூட்டியே சமரசக்கூட்டம் நடத்தி திருவிழாவில் அனைத்துச் சமூகத்தினரையும் பங்கேற்க செய்து திருவிழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், இரு தரப்பினருக்கான சமரசக் கூட்டம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்த அனுமதி கோரினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி மறுத்ததோடு, தேர் இழுத்து வரும் போது அவரவர் பகுதிகளில் பூஜைகள் செய்து கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர், நாரணமங்கலம் தேரடி வீதியில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story