திருச்சியில் பலூன் வியாபாரியின் 2 மகள்கள் கடத்தலா? போலீசார் விசாரணை


திருச்சியில் பலூன் வியாபாரியின் 2 மகள்கள் கடத்தலா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பலூன் வியாபாரியின் 2 மகள்கள் கடத்தப்பட்டனரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

மலைக்கோட்டை,

திருச்சி அருகே பாய்லர் ஆலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லூர்து மேரி. ரமேஷ் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். ஊர் ஊராக சென்று பலூன் விற்பனை செய்வது வழக்கம். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் ஜான்சி (வயது 13), இளையவள் தமிழ்செல்வி (12) ஆகியோரை பலூன் வியாபாரத்திற்கு ரமேஷ் அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி திருச்சி சிங்காரதோப்பு சூப்பர் பஜார் பகுதியில் பலூன் விற்பனைக்கு ரமேஷ் தனது மகள்களுடன் வந்தார். 2 மகள்களும் அதே கடைவீதியில் சற்று தள்ளி நின்று பலூன் விற்பனை செய்தனர்.

துணை கமிஷனரிடம் புகார்

இந்தநிலையில் பலூன் விற்பனை முடிந்ததும் ரமேஷ் வீட்டிற்கு புறப்பட்டு செல்ல தயாரானார். அப்போது தனது மகள்களை அவர் தேடிய போது அங்கு இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சி, தமிழ்செல்வி ஆகியோரை மர்மநபர்கள் யாரேனும் கடத்தி சென்றனரா? என விசாரித்து வருகின்றனர். மேலும் பலூன் வியாபாரத்திற்கு செல்ல பிடிக்காமல் 2 பேரும் யாரிடமும் சொல்லாமல் வேறு எங்கும் சென்றுவிட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். மாயமான 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரமேஷ் குடும்பத்துடன் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து துணை கமிஷனர் நிஷாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் மாயமான தனது 2 மகள்களையும் கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story