ஹால்டிக்கெட் பெற்றுத்தர கோரி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்கள் மனு


ஹால்டிக்கெட் பெற்றுத்தர கோரி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்கள் மனு
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஹால்டிக்கெட் பெற்றுத்தர கோரி பாரதி தாசன் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற வில்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் குறைகளை போக்கும் வகையில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், என்றார்.

கூட்டத்தில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, வங்கி கடன், சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடி கருவன் குடியிருப்பை சேர்ந்த சுசீலா, சக்திவேல் ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்ததை தொடர்ந்து அவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பில் நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார்.

வரத்துவாரியை அழித்து சாலை

கூட்டத்தில் மணமேல்குடி தாலுகா குடுவையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மணமேல்குடி தாலுகா குடுவையூர் ஏரிக்கான நீர்வரத்து வாய்க்கால் பூவனூர் ஏரியில் இருந்து கோ.பழங்குளம், செம்மனாம்பொட்டல் வழியாக வந்து கொண்டு இருந்தது. குடுவையூர் கிராமத்தில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடுவையூர் ஏரியில் 154 ஏக்கர் பரப்பளவில் நன்செய் நிலம் உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாரியை செம்மனாம்பொட்டல் கிராமத்தினர் அழித்து மண் சாலை அமைத்து உள்ளனர். இதனால் மழை பெய்தாலும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வரத்து வாரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

குடிநீர் வசதி

மழையூர் அரியான்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மழையூர் அரியான்டி கிராமத்தில் பல மாதங்களாக குடிநீர் வசதி இல்லை. இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். இது குறித்து பல முறை மனு அளித்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவில்லை. தற்போது வெயில் காலம் என்பதால் குடிநீர் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு பணம் கட்டியும் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்வு எழுதும் மையமான புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு சென்று ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தேர்வு எழுதலாம் எனக்கூறி உள்ளனர்.

இதை நம்பிய மாணவ, மாணவிகள் நேற்று தேர்வு எழுதுவதற்காக மன்னர் கல்லூரிக்கு சென்றனர். அப்போது கல்லூரி பேராசிரியர்கள் உங்களுக்கு ஹால்டிக்கெட் வரவில்லை எனக்கூறி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், உடனடியாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேசி எங்களுக்கு தேர்வு எழுதுவதற்கு ஹால்டிக்கெட் பெற்று கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 

Next Story