திருவாடானை தாலுகாவில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருவாடானை தாலுகாவில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2019 3:30 AM IST (Updated: 28 May 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

தொண்டி,

திருவாடானை, தொண்டி, நகரிகாத்தான் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் ஏற்படுத்தும் வகையிலும் இருந்து வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கின்றன. இதனால் பல நேரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் சாலையின் குறுக்கே செல்லும் வாகனங்களில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் உரசி வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகி விடுகிறது.

இதேபோல் பல இடங்களில் பழைய டிரான்ஸ்பார்மார்கள் மாற்றப்படாமல் இருப்பதால் பல கிராமங்களில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக போதிய மின் வசதி கிடைப்பதில்லை. தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் 100–க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் செல்லும் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் வயல்காடுகளில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் நேரங்களில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் உரசுவதாலும், பல நேரங்களில் பழுதடைந்த மின் கம்பிகள் காற்று பலமாக வீசும் நேரங்களில் அறுந்து விழுந்து கால்நடைகள் உயிரிழப்புகளை சந்திக்கிறது. இது தொடர்பாக பலமுறை மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு புகாராவும், மனுக்களாகவும் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் தாலுகாவில் மின் வழித்தடங்களை நேரில் ஆய்வு செய்து பழுதடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் சீரமைக்கப்பட வேண்டும். பழைய டிரான்ஸ்பார்மர்களை அகற்றி விட்டு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும். மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக போதிய மின்சாரம் கிடைக்காத கிராமங்களை கண்டறிந்து கூடுதல் டிரான்ஸ்பார்மர்களை அமைத்து சீரான மின் வினியோகம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் போதிய பணியாளர்கள் இல்லாததால் பல நேரங்களில் மின் குறைபாடுகள் சரி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே போதிய மின் பணியாளர்களையும் உடனடியாக இப்பகுதியில் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story