அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வெட்டி கொலை: துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்
மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
மானாமதுரை,
திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊமைத்துரை மகன் சரவணன் (வயது 38). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மானாமதுரை மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவரை கடந்த 26–ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வைகை ஆற்று பாலத்தில் வைத்து வெட்டி கொலை செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தேர்தலையொட்டி போலீசார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தேர்தல் முடிந்தும் மீண்டும் அவர்கள் பழைய இடத்திற்கு அனுப்பப்படவில்லை. மானாமதுரையில் பெரும்பாலான போலீசார் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பழைய இடத்திற்கு நியமிக்கப்படவில்லை.
இதனால் தற்போதுள்ள போலீசாருக்கு புதிய நபர்கள் குறித்த நடமாட்டம், பிரச்சினைக்கு உரிய நபர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவரையே போலீசாருக்கு சரிவர தெரியவில்லை. மற்றவர்கள் வந்து உறுதிப்படுத்திய பின்பு தான் போலீசாருக்கு தெரியவந்தது.
சரவணனை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கண்காணித்து வந்ததாக, போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மானாமதுரை அண்ணாசிலை, பைபாஸ் ரோடு, சிவகங்கை ரோடு உள்ளிட்டவைகள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள், இந்த பகுதிகளில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும், போலீசாரும் இந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
அப்படியிருந்தும் கொலை சம்பவம் நடந்துள்ளது. கொலையாளிகள் குறித்து 3 நாட்களாகியும் எந்த தகவலும் தெரியாமலும், துப்பு துலக்க முடியாமலும் போலீசார் திணறி வருகின்றனர். உள்ளுர் போலீசார் இருந்திருந்தால் உடனடியாக குற்றவாளிகள் யார் என்பது தெரியவந்திருக்கும். குற்றவாளிகள் தப்பி செல்லும் பாதைகள் குறித்து தகவலறிந்து கணகாணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருப்பார்கள், புதிய போலீசாருக்கு உரிய தகவல் தெரியாததும் கொலை சம்பவம் நடக்க காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது. அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.