போர்க்கால அடிப்படையில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவு


போர்க்கால அடிப்படையில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவு
x
தினத்தந்தி 28 May 2019 11:30 PM GMT (Updated: 28 May 2019 10:57 PM GMT)

சேலம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கோபிநாத், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) முருகன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் மக்களின் குடிநீர் தேவைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ள காரணத்தால் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கான குடிநீர் தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தந்த பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் மக்களின் குடிநீர் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஏற்கனவே, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரம் உள்ள ஆழ்துளை கிணறுகள் இயங்காமல் இருந்தால் அத்தகைய ஆழ்துளை கிணறுகளை உடனடியாக சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும். மேலும், பொதுமக்களிடமும் நீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

உள்ளாட்சி துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான நீர்தேக்க தொட்டிகளை முறையான அளவுகளில் குளோரினேசன் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். மேலும், மின் மோட்டார் மூலம் முறையற்ற வகையில் குடிநீரை உறிஞ்சும் நபர்களின் மின் மோட்டார் பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய வீடுகளுக்கு குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். குடிநீரை வீணாக்காமல் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

மேலும், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் அகற்றுதல், சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட துறை அலுவலர்கள் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Next Story