அருப்புக்கோட்டையில், ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து - ரூ.7¼ லட்சம் எரிந்து நாசமானது


அருப்புக்கோட்டையில், ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து - ரூ.7¼ லட்சம் எரிந்து நாசமானது
x
தினத்தந்தி 29 May 2019 10:30 PM GMT (Updated: 29 May 2019 7:26 PM GMT)

அருப்புக்கோட்டையில் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏ.டி.எம். எந்திரம் மற்றும் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாயின.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை ரோட்டில் 3 மாடி வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் காவலாளியாக அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு அவர் வழக்கம் போல் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்த இன்வெர்ட்டர் அறையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்து பதறிப்போன கார்த்திக் இன்வெர்ட்டர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு சிறிய அளவில் தீ எரிந்து கொண்டிருந்தது.

உடனே அவர் தீயை அணைக்க முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து கார்த்திக் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையம் மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் ஏ.டி.எம். மையம் முழுவதும் தீ மளமள பரவியது. ஏ.டி.எம். மையத்தில் இருந்த 2 ஏ.சி. எந்திரங்களும் வெடித்ததில் தீயின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. காவலாளி தகவல் கொடுத்த ஒரு மணிநேரத்துக்குப் பின் அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையில் வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் ஏ.டி.எம். மையம் முழுவதும் எரிந்து நாசமானது. உள்ளே இருந்த ஏ.டி.எம். எந்திரமும் கருகியது. அதனுள் இருந்த ரூ.7¼ லட்சம் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த தீ விபத்து சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story