மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 14,877 பேர் எழுதுகிறார்கள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 14,877 பேர் எழுதுகிறார்கள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 30 May 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 14,877 பேர் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 8 மற்றும் 9-ந்தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிதேர்வை 14 மையங்களில் 4 ஆயிரத்து 387 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை 33 மையங்களில் 10 ஆயிரத்து 490 பேரும் எழுத உள்ளனர். இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குதல் மற்றும் பஸ் போதிய அளவில் தேர்வு நாட்களில் இயக்குவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் தேர்வாளர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வாளர்கள் முறையாக பின்பற்றி தேர்வினை சிறப்பாக எழுதி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story