மசாஜ் நிலையம் என்ற பெயரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் - 2 பேர் கைது, 4 அழகிகள் மீட்பு
திருப்பூரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து 4 அழகிகளை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில் ஒரு வீட்டில் வெளிமாநில அழகிகளை அழைத்து வந்து விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் 4 அழகிகள் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டனர். அங்கிருந்து ரூ.500 மற்றும் ஏ.டி.எம். ஸ்வைப் எந்திரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரோஹித்(வயது 29), கோழிக்கோடுவை சேர்ந்த முபாஷிர் (39) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-
திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்டேன்ஸ் வீதியில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவி(38) என்பவர் மசாஜ் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரும் ரோஹித்தும்(29) மசாஜ் நிலையத்தை கவனித்து வந்துள்ளனர். முக்கிய தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் மசாஜ் நிலையத்துக்கு வந்ததால் அழகிகளை வைத்து விபசாரம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேவி, கொங்கணகிரி வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அந்த வீட்டில் வெளி மாநில அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்கு முபாஷிர் புரோக்கராக செயல்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதில் தேவி மட்டும் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட அழகிகளில் 2 பேர் கேரளாவையும், ஒருவர் கர்நாடகாவையும், ஒருவர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர் ஆவார்கள். அவர்களை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஹித், முபாஷிர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story