கழிவறை தொட்டிக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை உடல் தம்பதியை பிடித்து போலீசார் விசாரணை


கழிவறை தொட்டிக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை உடல் தம்பதியை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 May 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கழிவறை தொட்டிக்குள் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் கடைவீதி பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவர் தனக்கு சொந்தமான அடுத்தடுத்து உள்ள 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் 2 வீடுகளுக்கு பொதுக்கழிவறை உள்ளது. அதில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயில் நேற்று அடைப்பு இருந்தது. இதையடுத்து துப்புரவு பணியாளர்களை வரவழைத்து கழிவறை குழாய் அடைப்பை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் இறந்த நிலையில் கழிவறையில் கழிவுநீர் செல்லும் குழாயின் தொட்டிக்குள் கிடந்தது. இதைக்கண்டு துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழிவறை தொட்டிக்குள் குழந்தையின் உடல் கிடந்தது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பச்சிளம் ஆண் குழந்தை அதேபகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்ததும், அது பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் பிடித்துச் சென்று எதற்காக குழந்தையின் உடலை கழிவறை தொட்டியில் வீசினார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story