ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில், 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில், 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 2 Jun 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திட்டமிட்டபடி தஞ்சையில் 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முத்தரசன் கூறினார்.

தஞ்சாவூர்,

ஹைட்ரோ கார்பன் திட்டம், ஷேல் வாயு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என கூறி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என மத்திய அரசு கூறியது. ஆனால் விழுப்புரம் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாலைவனமாகி விடும். குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக உரிய அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு, 18 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

தமிழகத்தில் இப்படி இதுவரை யாரும் கேள்வி கேட்டு நோட்டீசு அனுப்பியது கிடையாது. இது அரசின் உத்தரவா? அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளரா? என்பதை தெரியப்படுத்த வேண்டும். அனுமதி கொடுத்தாலும், மறுக்கப்பட்டாலும் திட்டமிட்டபடி 4-ந் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருந்தபோது தெரிவித்தார். அவர் வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு, ஒரு தெளிவான பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு இசைந்து செயல்படும் போக்கில்தான் மாநில அரசு உள்ளது.

இதனால் தான் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை எப்படியும் நடைமுறைப்படுத்தியே தீருவோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் மதசார்பற்ற கட்சிகள், விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம்.

நேரு பிரதமராக இருந்தபோது 1965-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி செய்தார். இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழகமே ஸ்தம்பித்தது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நேரு, இந்தி மொழி திணிக்கப்படாது என உறுதி அளித்தார். அந்த உறுதியை மீறி இந்தியை திணிக்க முற்பட்டால் 1965-ம் ஆண்டு நடந்த போராட்டம் மீண்டும் நடைபெறும்.

காவிரி டெல்டாவில் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சாகுபடியும் சரியாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story