மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

அரியாங்குப்பத்தில் மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம்,
புதுவை மூலக்குளத்தை சேர்ந்தவர் ரமணா (வயது 23). இவர் அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமணா தனது மனைவியின் தங்கையான 17–வது வயது சிறுமியை பாலியல் பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ரமணாவை போச்சோ சட்டத்தில் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு ரமணா ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் ரமணா வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடைய மனைவியின் தங்கை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த ரமணா மனைவியின் தங்கையிடம் மீண்டும் பாலியல் பலத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 17–வயது சிறுமி அலறினாள். சத்தம் கேட்டவுடன் ரமணாவின் மாமியார் விரைந்து வந்தார். அதற்குள் ரமணா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமணாவை மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






