தொழிற்சாலைகளை மூடக்கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தொழிற்சாலைகளை மூடக்கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:30 AM IST (Updated: 2 Jun 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளை மூடக்கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பூங்காவனபுரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே பருப்பு மற்றும் தவிடு தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளால் அதிகளவில் காற்று மாசு ஏற்படுகிறது. தவிடு தயாரிக்கும்போது காற்றில் கிளம்பும் தூசிகள் அங்குள்ள வீடுகளின் கூரைகளில் படர்கின்றன.

இதனால் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்கள் மற்றும் உணவுகளிலும் தூசிபடர்வதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை அந்த தொழிற்சாலைக்கு வந்த ஒரு லாரியை சிறை பிடித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள 2 தொழிற்சாலைகளையும் மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த 2 தொழிற்சாலைகளையும் மூடாவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்று கூறிவிட்டு சிறை பிடித்த லாரியை விடுவித்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story