நன்றி அறிவிப்பு பொதுக்கூட்ட தேதி மாற்றம்: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி திருச்சி வருகை


நன்றி அறிவிப்பு பொதுக்கூட்ட தேதி மாற்றம்: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி திருச்சி வருகை
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்ட தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற 10-ந்தேதி திருச்சி வரும் மு.க.ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் சிலைகளையும் திறந்து வைக்கிறார்.

திருச்சி,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்கள். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மண்டல அளவிலான தி.மு.க. பொதுக்கூட்டம் ஜூன் 15-ந்தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார். கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நன்றி அறிவிப்பு பொதுக்கூட்ட தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 15-ந்தேதிக்கு பதிலாக வருகிற 10-ந்தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருச்சி வருகிறார். அன்றைய தினம் காலை 9 அணி அளவில் அன்பில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னோடி மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அன்று மாலை 4 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலாயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். இரவு 7 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச இருக்கிறார் என தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story