தஞ்சையில் திறந்தவெளி மதுபான கூடமாக செயல்படும் அரண்மனை வளாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


தஞ்சையில் திறந்தவெளி மதுபான கூடமாக செயல்படும் அரண்மனை வளாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் திறந்தவெளி மதுபான கூடமாக அரண்மனை வளாகம் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சையை முத்தரையர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி செய்துள்ளனர். சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் தஞ்சை பெரியகோவில், பெரியகோட்டை சுவர், சின்ன கோட்டை சுவர் ஆகியவை கட்டப்பட்டன.

சோழ மன்னர்கள் ஆண்ட தஞ்சையில் 16-ம் நூற்றாண்டில் நாயக்கர்களின் ஆதிக்கம் தொடங்கியது. அவர்களது ஆட்சி காலத்தில் தான் தஞ்சையில் அரண்மனை கட்டப்பட்டது. அந்த அரண்மனை இன்றைக்கும் தஞ்சை கீழராஜவீதியில் உள்ளது. அரண்மனை வளாகம் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அரண்மனையின் 75 சதவீதம் அழியாமல் இருக்கிறது. அரண்மனை வளாகமானது தர்பார் மண்டபம், மணிமண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என 4 முதன்மை கட்டிடங்களை கொண்டுள்ளது.

மேலும் அரண்மனை வளாகத்தில் சரசுவதிமகால் நூலகம், கலைக்கூடம், தீயணைப்பு நிலையம், மேற்கு போலீஸ் நிலையம், அரசர் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை ஆகியவை இயங்கி வருகின்றன.

அரண்மனை வளாகத்தில் பெரிய விளையாட்டு மைதானமும் உள்ளது. இந்த மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்தி வருகின்றது. அதுதவிர மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மைதானம் கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மைதானத்திற்குள் செல்வதற்கு 2 புறம் பெரிய கதவு போடப்பட்டு இருக்கிறது. இந்த கதவு எப்போதும் திறந்து கிடப்பதால் விளையாடும் இளைஞர்களை தவிர ஏராளமானோர் மோட்டார் சைக்கிள், கார்களில் மைதானத்திற்கு வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்களில் பலர், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி வந்து, மரங்களின் நிழல்களில் அமர்ந்து குடித்து விட்டு கும்மாளமிடுகின்றனர். அவர்கள் மதுப்பாட்டில்களை அப்படியே மைதானத்திலேயே வீசிவிட்டு செல்கின்றனர். பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் பலர் மைதானத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

மேற்கு போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள இந்த மைதானத்தில் தினமும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அருந்திய சிலருக்குள் தகராறு ஏற்படவே ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு விளையாட்டு மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணியை மேற்கொண்டனர். ஆனால் அதன்பிறகு எந்தவித கெடுபிடியும் இல்லாததால் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

மைதானத்தை தூய்மை செய்யும் பணியில் நேற்று இளைஞர்கள் சிலர் ஈடுபட்டனர். பொக்லின் எந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டன. அப்போது மதுப்பாட்டில்கள் ஏராளமானவை கிடந்தன.

அரண்மனை வளாகமானது திறந்தவெளி மதுபான கூடமாக செயல்பட்டுவதை தடுக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளையாட்டு மைதானத்தில் சிறுநீர் கழித்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story