சூறைக்காற்றுடன் மழை: மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டிய நிலையில் மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. 5.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
பலத்த சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நூர்சாகிபுரத்தில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் அங்கு வசிக்கும் டாஸ்மாக் ஊழியரான செல்லக்கனி(வயது41) என்பவரது வீட்டில் மரக்கிளை முறிந்து கிடந்துள்ளது. கிளையின் ஒரு பகுதி அந்தப்பக்கமாக சென்ற மின்வயரில் உரசியபடி இருந்துள்ளது.
இதை கவனிக்காமல் கிளையை அகற்ற செல்லக்கனி அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது கிளையில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் அவரை தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கோடைமழை கொட்டி வெப்பம் தணிந்தாலும், நேற்று வீசிய சூறைக்காற்றினால் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள், தென்னை மரங்கள் சாய்ந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.