வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 20 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 20 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லதா(வயது 48). இவர் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே அர்ச்சனை தட்டு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அமாவாசை என்பதால் லதா நேற்று முன்தினமே வீட்டை பூட்டிவிட்டு வியாபாரத்துக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து லதா, பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற மோப்ப நாய், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடய வியல் நிபுணர்கள் வீட்டில் சோதனையிட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story