12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு கலெக்டர் தகவல்


12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக இத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாமல் நேரடியாக இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது 2019-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே பதிவு மூப்பு

இதையடுத்து நேற்று முதல் வருகிற 17-ந்தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலை வாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன் படுத்தி மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் தங்கள் அளவிலேயே பதிவு செய்யலாம். அல்லது தங்கள் மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம். இணையதள முகவரி tn.ve-l-a-iv-a-a-i-ppu.gov.in

மாணவர்கள் ஏற்கனவே 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து இருப்பின் அந்த வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி 12-ம் வகுப்பு கல்வித்தகுதியினை கூடுதலாக பதிவு செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story