மணப்பாறை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தாததால் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்


மணப்பாறை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தாததால் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 9:00 PM GMT)

மணப்பாறை அருகே உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்தாததால் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பண்ணப்பட்டி, மூரம்பட்டி, ஈச்சம்பட்டி, புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தபள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 2005-ம் ஆண்டே அதற்கான தொகையை செலுத்தியதாக தெரிகிறது. ஆனால், பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இதற்காக ஏற்கனவே பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், பள்ளியை தரம் உயர்த்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களும் பங்கேற்றனர். பள்ளியை தரம் உயர்த்தக்கோரி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

நீண்டநேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் அதே இடத்தில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டது.

பின்னர், வருவாய் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளியை தரம் உயர்த்துவது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். 

Next Story