குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றார்


குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றார்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:17 AM IST (Updated: 4 Jun 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கலெக்டர் மனுக்களை பெற்றார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வழக்கமாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்தனர். இதையறிந்த கலெக்டர் ஜெயகாந்தன், அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர் அந்த மனுக்கள் மீது ஒருவாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்டவர்களுக்கு பதில் அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பை அகற்ற கோருதல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பாக உள்பட 292 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பொன்ராஜ் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story