தஞ்சை மாநகராட்சி கிடங்கில் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியது


தஞ்சை மாநகராட்சி கிடங்கில் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 4 Jun 2019 10:45 PM GMT (Updated: 4 Jun 2019 3:47 PM GMT)

தஞ்சை மாநகராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர்,


தஞ்சை ஜெபமாலைபுரத்தில் 21 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. தஞ்சை மாநகரில் உள்ள 51 வார்டுகளில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டதால் மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன.

இதற்கு மேல் குப்பைகள் கொட்டுவதற்கு கூட இடம் இல்லாததால் குப்பைக்கிடங்கின் நுழைவு வாயில் பகுதியில் கூட குப்பைகள் கொட்டப்படக்கூடிய நிலை உருவானது. குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுதிணறல் உள்ளிட்ட பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் குப்பைகள் குவிந்து வந்ததால் மறுசுழற்சி முறையில் குப்பைகளை தரம் பிரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியே 43 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என மறுசுழற்சி முறையில் தரம் பிரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து குப்பைகளை தரம் பிரிக்கக்கூடிய எந்திரங்கள், மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன.

இந்தநிலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 21 ஏக்கர் பரப்பளவில் தேங்கியுள்ள குப்பைகளை தினமும் எந்திரங்களின் மூலம் சாக்குகள், தேங்காய் சிரட்டைகள், ரப்பர்கள், பாலித்தீன் பைகள், டயர்கள், தேங்காய் நார்கள், இரும்புகள், செருப்புகள், பேனாக்கள், துணிகள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது. எல்லா பொருட்களும் தரம் பிரிக்கப்பட்டு குப்பையில் உள்ள மக்கிய மண் மூலம் இயற்கை உரமாக தயாரிக்கப்பட உள்ளது. தரம் பிரிக்கப்பட்ட பின்பு பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கு ஏதுவாக குப்பைக்கிடங்கில் 15 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:– குப்பைகள் தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குப்பைகளில் இருந்து பிரிக்கப்படும் பாலித்தீன் பைகள் அரியலூர் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். இரும்பு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும். தஞ்சை மாநகரில் 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் செயல்பாட்டிற்கு வந்தவுடன் மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு குப்பைகள் கொண்டு வரப்படாது. அங்குள்ள குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டவுடன் காலிமனையில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story