வேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


வேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பெரும்பாலான ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கை.களத்தூர் ஊராட்சியில் உள்ள சிறுநிலா கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென ஒன்று திரண்டு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வேப்பந்தட்டை- வெள்ளுவாடி சாலையில் சிறுநிலா பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் மற்றும் கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீக்கப்படும். மேலும் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதியில் கூடுதலாக 2 குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வேப்பந்தட்டை- வெள்ளுவாடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் வி.களத்தூர் மில்லத் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் அருகே ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை. மேலும் அப்பகுதியில் ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள வி.களத்தூர்- பசும்பலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வி.களத்தூர்- பசும்பலூர் சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story