திண்டுக்கல் - நெல்லை இடையே பாலக்காடு -திருச்செந்தூர் பயணிகள் ரெயில் ரத்து; அதிகாரிகள் தகவல்


திண்டுக்கல் - நெல்லை இடையே பாலக்காடு -திருச்செந்தூர் பயணிகள் ரெயில் ரத்து; அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:15 AM IST (Updated: 5 Jun 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் திண்டுக்கல்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்,

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு காலை 9 மணிக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி செல்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் நேற்று முன்தினம் முதல் வருகிற 30-ந்தேதி வரை திண்டுக்கல்-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் இந்த ரெயில் திண்டுக்கல்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். அதேபோல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மதுரை-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படும்.

இதேபோல், திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் நேற்று முன்தினம் முதல் வருகிற 30-ந்தேதி வரை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் நெல்லை-திண்டுக்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நெல்லை-மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர, சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல், அம்பாத்துரை ரெயில் நிலையங்களில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

மதுரை-கோவை பயணிகள் ரெயில் மதுரையில் இருந்து வழக்கமாக காலை 7.45 மணிக்கு இயக்கப்படும். இந்த ரெயில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7.15 மணிக்கு (புதன்கிழமை தவிர) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். நெல்லை- மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் இணைப்பு ரெயில் திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேற்குறிப்பிட்ட நாட்களில் பகுதியாக ரத்து செய்யப்படும்.

அதேபோல் நாகர்கோவில்-கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் திண்டுக்கல்-மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

நாகர்கோவில்-மும்பை விரைவு ரெயில் திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். இந்த தகவலை திண்டுக்கல் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story