சின்னசேலம் அருகே பரபரப்பு; பள்ளி விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் திடீரென இறந்தான். அவனது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தேவூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசந்திரன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுடைய மகன் சஞ்சய் (வயது 13). இவன் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். இதற்காக அவன் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தான்.
7–ம் வகுப்பு படித்து முடித்துள்ள சஞ்சய், கோடை விடுமுறையில் இருந்து வந்தான். கடந்த சில நாட்களாக சஞ்சயின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை சஞ்சயை அவனது பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு சென்று விட்டனர். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் சஞ்சய், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதிக்கு சென்றான்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சஞ்சய் விடுதியில் உணவு சாப்பிட்டான். இதற்கிடையே ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், விடுதி வார்டன் உதவியுடன் சஞ்சயை மீட்டு சிகிச்சைக்காக மேல்நாரியப்பனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி சஞ்சய் பரிதாபமாக இறந்தான். இதற்கிடையே இதுபற்றி அறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சஞ்சயின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் விரைந்து வந்து, அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வளர்மதி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சயின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பள்ளிக்கூடம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதியில் தங்கி படித்த மாணவன் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.