விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்தும் பணி தீவிரம்


விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:15 PM GMT (Updated: 5 Jun 2019 7:04 PM GMT)

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இங்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதால் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம், அதிக தூரம் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டமாக அமைந்துள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு துரித பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் மூலம் விபத்து மற்றும் உயிர்பலிகள் குறைந்துள்ளது.

இந்த விபத்து மற்றும் உயிர் பலிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் வகையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இப்பிரிவில் விபத்திலிருந்து மீட்டு சிகிச்சைக்காக வருகிற நோயாளிகளை 3 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வசதியாகவும், அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன், கூடுதலாக 30 படுக்கை வசதிகள் கொண்டதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி வரும்போது நேரடியாக விபத்து சிகிச்சை பிரிவிற்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டும், இப்பிரிவு முழுமையாக குளிர்சாதன வசதியுடனும் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகள் தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் இப்பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வர திட்டமிட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இனிவரும் ஆண்டுகளில் இம்மருத்துவமனையில் அனைத்து பிரிவு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ சாதனங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு முதல்கட்டமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காரணமாக தற்காலிகமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனையின் கிழக்கு பகுதியில் ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள மருத்துவமனை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Next Story